தூத்துக்குடி பால்பாண்டி நகரைச் சேர்ந்தவர், ராஜன் மகன் பால்ராஜ்(48). இவர் முந்திரி பருப்புகளை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் இவர் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி சாலைப் பகுதியிலுள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து, அதில் முந்திரிபருப்பு மூட்டைகளை ஏற்றுமதி செய்வதற்காக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆக.7ஆம் தேதி அன்று இரவு குடோனிற்கு இருசக்கர வாகனம் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அங்கு இருந்த வாட்ச்மேனை கத்தியைக் காட்டி மிரட்டி குடோன் ஷட்டரின் பூட்டை உடைத்துள்ளனர்.
பின்னர் அங்கு இருந்த 40 முந்திரி பருப்பு மூட்டைகளையும் சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
தற்போது இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், தூத்துக்குடி பெரியசாமி நகர் பாலம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன்களான அழகர்(27), மணிகண்டன்(32), வேலுசாமி மகன் மாரிமுத்து(20), தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுரேஷ்(20) மற்றும் முத்தையாபுரம் சுந்தர் நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் அஜித்குமார்(26) ஆகியோர் குடோனில் வாட்ச்மேனை கத்தியைக் காட்டி மிரட்டி, முந்திரி பருப்பு மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கொள்ளையடித்துச் சென்றது தெரியவநதுள்ளது.
அதன் பின் உடனே விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குற்றவாளிகளான அழகர், மணிகண்டன், சுரேஷ், அஜித்குமார் மற்றும் மாரிமுத்து ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற ரூபாய் 3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள, 3 டன் 200 கிலோ முந்திரி பருப்பு மூட்டைகள் மற்றும் கொள்ளையடித்து செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 டன் முந்திரி பருப்பு மூட்டைகளை மீட்ட தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'நான் ஜெயிலுக்கு போமாட்டேன்' - கோவை கோர்ட்டில் கத்தியை காட்டிய மிரட்டிய நபர்!