தூத்துக்குடி: தூத்துக்குடி புதியம்புத்தூர், நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர், செல்வம். அவரது மகன் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலெட்சுமி (40) மற்றும் செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து, அந்த பணத்தை ஷேர்மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து, லாபம் ஈட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அவ்வாறு கொடுப்பவர்களிடம், 10 சவரன் நகை கொடுத்தால், 10 நாட்களில் நகையுடன் ரூபாய் 10,000/-மும் சேர்த்து கொடுப்பதாகவும், மேலும் 35 சவரன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய மதன்குமார் கடந்த 06.05.2023அன்று தனது தாய் மற்றும் சகோதரியிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளையும், கடந்த 09.05.2023அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 சவரன் தங்க நகைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதில் மதன்குமாருக்கு எதிரிகள் ரூபாய் 40,000/- பணம் மட்டுமே கொடுத்துவிட்டு, கார் வாங்க முன்பணமும் கட்டவில்லை. இதனால் சந்தேகமடைந்த மதன்குமார் கடந்த 26.06.2023அன்று மேற்படி, கிரேனா என்வரின் வீட்டிற்கு சென்று நகைகளை தருமாறு கேட்டதற்கு, மேற்படி 3 பேரும் சேர்ந்து மதன்குமாரிடம் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த மதன்குமார் கடந்த 01.07.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணனிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முக சுந்தரம், ராஜ்குமார் மற்றும் மோகன் ஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர்களான கிரேனா, ஜெயலெட்சுமி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், மேற்படி நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம் இதே போன்று பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டிதருவதாக கூறி 490 சவரன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பிய வேலூர் மாவட்ட ஆட்சியர்!!