தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சிலர் தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில், தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அலுவலர்கள், தூத்துக்குடி கேம்ப் - 2 கடற்கரைப் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிக்கிய மெழுகு திரவம்
அப்போது அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது மெழுகு போன்ற ஒரு பொருளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை ஆய்வு செய்ததில், மெழுகு போன்ற அந்தப் பொருள், அரிய வகை ஆம்பர் கிரீஸ் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆம்பர் கிரீஸ் திமிங்கலத்தின் குடலில் சுரக்கக்கூடிய மெழுகு போன்ற திரவம் ஆகும். இது 20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்களின் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டது ஆகும்.
வெளிநாடுகளில் அதிக விலை
இதை உயர்த்தரமான நறுமணப் பொருள்கள் தயாரிக்க பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆம்பர் கிரீஸ் அதிக அளவில் நறுமணப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்ந்து, காரில் இருந்த 23 கிலோ எடை கொண்ட ஆம்பர் கிரீஸை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 23 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
மூவரிடம் விசாரணை
ஆம்பர் கிரீசை காரில் கடத்தி வந்த நெல்லை மேலப்பாளையம் நேதாஜி ரோட்டைச் சேர்ந்த சதாம் உசேன், தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த திமுக வட்டப் பிரதிநிதியும், முன்னாள் திமுக கவுன்சிலருமான பெரியசாமி, நெல்லை மாவட்டம், தருவை திடியூர் ரோட்டைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த அலுவலர்கள், விடிய, விடிய விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மூன்று நபர்களையும் தூத்துக்குடி ஜெஎம் நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, மூவரையும் வரும் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்களை பேரூரணி சிறையில் அடைக்க மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் காரில் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கி தாய்- மகள் உயிரிழப்பு