தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் மதுவிற்பனை தடை செய்யப்பட்டு, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே, சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து ஊரடங்கு காலத்தில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, அம்மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள காவல்துறையினர் நேற்று (மே.12) மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில், தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில்குமார், மகாலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தென்பாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட அண்ணாநகரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த அண்ணாநகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற கண்ணன் (23) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1,872 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதைப் போலவே, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் மாதவராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சட்டவிரோதமாக மது விற்ற 5 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த 885 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வடபாகம், தெர்மல்நகர், ஸ்ரீவைகுண்டம், மேற்கு கோவில்பட்டி, எட்டயாபுரம், தட்டார்மடம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் 11 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் சட்டவிரோத விற்பனைக்காக மதுபானம் பதுக்கி வைத்திருந்தவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2,907 மதுபாட்டில்களும், ரூ. 6 ஆயிரத்து 700 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ’சொமாட்டோ ஊழியர்களுக்கு தடுப்பூசி’ - நிறுவனர் தகவல்