தூத்துக்குடி: தமிழ்நாட்டில் மது விற்பனை அதிகரிப்பது போலவே மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் சிலர் டாஸ்மாக் கடைகளில் மது கிடைக்காத பட்சத்தில் கள்ள மதுவை வாங்கி அருந்தியதால், உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுமார் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் இன்று (ஜூன்.22) முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான நிலையில், இன்று முதல் கடைகள் மூடப்பட்டன. அதன் நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் கடைகளில் 16 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
அதன்படி, தூத்துக்குடியில் உள்ள பொன்னகரம், வட்டக்கோவில், அண்ணாநகர் மெயின் ரோடு, பிரையன்ட் நகர், திருச்செந்தூர் ரோடு, மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, டபிள்யூ.ஜி.சி. ரோடு, புதிய பஸ் நிலையம், பாலவிநாயகர் கோவில் தெரு, தூத்துக்குடி கல்லூரி நகர், கயத்தார் கடம்பூர் ரோடு, தெற்கு சுப்பிரமணியபுரம், கோவில்பட்டி, எட்டயபுரம் ரோடு, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி பால்பாண்டி பேட்டை தெரு, கோவில்பட்டி புது ரோடு, உடன்குடி செட்டிகுளம் மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், இன்று பிரையன்ட் நகர் 1-வது தெருவில் மூடப்பட்ட கடை முன்பாக, மாநகரத் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தமிழ்நாடு அரசின் செயலுக்கு நன்றி கூறியும் கொண்டாடினர்.
இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியபோது, மதுக்கடை மூடியது தெரியாமல் தான் வழக்கமாக வாங்கும் மதுக்கடை ஒன்றிற்கு வழக்கம்போல் மது வாங்க வந்த மதுப் பிரியர் ஒருவருக்கு மதுக்கடை மூடியதை கொண்டாடி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி அனுப்பி வைத்த சம்பவம் ஏமாற்றத்தைக் கொடுத்தது. மேலும் பல மதுப்பிரியர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூறுகையில், "தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் சுமார் 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதற்கும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 9-மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இன்னும் பல கடைகள் இருக்கின்றன. அதனையும் மூட அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.