தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோயிலில் கடந்த 1972ம் ஆண்டு 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலை திருடு போனது. இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத்தில் இந்த நடராஜர் சிலை இருப்பதாகவும், இதனை ஏலமிடத் திட்டமிட்டுள்ளதாகவும், சிலையின் ஆரம்பத் தொகையாக 20 ஆயிரம் யூரோ முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சில நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், பாரீஸில் ஏலமிட இருப்பது கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்த இந்திய தொல்லியல் துறை மூலமாக நடவடிக்கை எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிலையை பிரான்ஸிலிருந்து தமிழகத்துக்கு 3 மாதத்துக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளைத் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரின் துரிதமான செயலால் சர்வதேச சந்தையில் ஏலத்தில் விடப்பட இருந்த பழங்கால சிலை ஒன்று விற்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹெரிட்டேஜ் கார் முதல் குவாட்ரிசைக்கிள் வரை.. சென்னையை அலங்கரித்த கார் கண்காட்சி!