தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதும் நடந்து வந்த +2 பொதுத்தேர்வு இன்றுடன் (ஏப்ரல் 3) முடிவடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இறுதி தேர்வு நடந்தது. இந்த பள்ளியில் வரலாறு பாட பிரிவில் படித்து வந்த செக்காரக்குடியை சேர்ந்த 17 வயது மாணவியும் தேர்வு எழுதினார்.
அதன் பின் பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவியிடம் செக்காரக்குடியை சேர்ந்த சோலையப்பன் (22) என்பவர், தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து செல்ல முற்பட்டுள்ளார். அப்போது, சோலையப்பன், எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி உள்ளார்.
இதனால் மாணவி கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்ட சக மாணவர்கள் சோலையப்பனிடம் இருந்து மாணவியை மீட்டுள்ளனர். இதையடுத்து அவரையும் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால், சோலையப்பன் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதனிடையே தகவலறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதுகுறித்து தட்டப்பாறை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன் பின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவி தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சோலையப்பனை, தட்டபாறை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜார்கண்டில் 12ஆவது மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது