தூத்துக்குடி: வெங்காய வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. வெளிச் சந்தையில் ஒரு கிலோ 120 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை-எளிய, நடுத்தர மக்கள் வெங்காயத்தை தங்களது அத்தியாவசிய தேவைக்கு கூட வாங்கி பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் வெங்காய பதுக்கலை தடுக்க வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக கூட்டுறவு விற்பனை அங்காடி மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45 க்கு விற்பனை செய்யும் நிகழ்ச்சியை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் படிபடியாக பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை காய்கறி அங்காடியில் விற்பனைக்காக 10 டன் வெங்காயம் இன்று (அக்.28)வந்திறங்கியது. இதுகுறித்து கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய கூட்டுறவு சங்கங்களின் விற்பனை இணையத்தில், தமிழக கூட்டுறவு சங்கங்களின் விற்பனை இணையம் வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் நாசிக்கில் இருந்து விற்பனைக்காக வெங்காயம் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை மாவட்டத்திற்கு 2 டன்னும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 8 டன்னும் அனுப்பப்படுகிறது.
பண்ணை பசுமை காய்கறி அங்காடியில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் ஸ்பிக் நகர், மதுரா கோட்ஸ் உள்பட 15 இடங்களில் பண்ணை பசுமை மினி சூப்பர் மார்க்கெட்களில் வெங்காய விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொருத்து அதிகப்படியான விற்பனை மையங்களை திறந்து வெங்காய விற்பனையை தொடங்குவோம். இதுதவிர ரேஷன் கடைகள் மூலமாகவும் வெங்காயம் விற்பனை செய்வதற்கு அரசு சுற்றறிக்கை அனுப்பினால் அது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: பண்டிகை காலங்களில் உயரும் வெங்காய விலை: யாருக்கு லாபம்?