அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலமாகும் திருவாரூர் தியாகராஜர் திருத்தலம். சிறப்புவாய்ந்த இந்தக் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் மாதம் 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே மாதம் 4ஆம் தேதி ஆழித்தேரோட்ட விழா நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்ட்டிருந்தது. இதனையடுத்து ஆழித்தேரின் கண்ணாடி கூண்டுகள் கிரேன் உதவியுடன் பிரிக்கப்பட்டன. இதனுடன் சுப்பிரமணியர், விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய 4 தேர்களின் கூரைகளும் பிரிக்கப்பட்டன.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினசரி உற்சவம் நடைபெற்று வந்த நிலையில், கோவிட்-19 பாதிப்பின் காரணமாக அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின்படி தியாகராஜர் கோயிலில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கான அனுமதி மார்ச் 20ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.
வியாபாரிகளுக்கும் கரோனா - 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி!
மேலும் மறு உத்தரவு வரும் வரையில், அனுமதி மறுப்பதுடன் கோயிலில் அன்றாடம் நடைபெறும் கால பூஜைகள், சாமி ஊர்வலம் அனைத்தும் கோயில் பிரகாரத்திற்குள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி உற்சவங்கள் நடைபெற்றன.
இச்சூழலில் கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் அதிகரித்த நிலையில், மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மே 4ஆம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுமா? என்பது பக்தர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
இவ்வேளையில் மதுரை உள்பட பல்வேறு முக்கிய கோயில் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனால் திருவாரூர் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில், ”கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும் மக்கள் அதிகமாக கூடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே மே 4ஆம் தேதி நடைபெற இருந்த திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.