திருவாரூரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் நடைபெற்றது. இதில் காந்தள் பூக்கும் காலம் என்ற நூலை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு 2013ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து வருகிறது. ஆனால், இந்திய அரசு காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்திவருகிறது. புதுச்சேரிக்கு உட்பட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துவிட்டார். தமிழக அரசு மிகத்தெளிவாக இந்த திட்டத்தை அனுமதிக்க முடியாது, என மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த பிரச்னையின் தீவிரம் தெரியாமலேயே பலர் அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அனைத்து கிணறுகளும் ஒற்றை உரிமத்தின் கீழ் கொண்டுவரப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் ஒட்டுமொத்த காவிரிப்படுகைகளும் காணாமல் போய்விடும். அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்தால் மட்டும் போதாது, களத்தில் இறங்கி போராட வேண்டும். இந்தத் திட்டத்தை கைவிடக் கோரி இந்திய அரசை வற்புறுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.