திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், மதுக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மற்றொருத் தரப்பினரும் கடையை முற்றுகையிட முயன்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பானச் சூழல் ஏற்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மதுக்கடையை மாற்றுவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 3) கோட்டூர் கிராம மக்கள் ஒன்று திரண்டு, மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டூர் பேருந்து நிலையத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்
பின் கோட்டூர் காவல் ஆய்வாளர் அறிவழகன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.