தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், இதுவரை ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் வேட்புமனுத் தாக்கலுக்கான 4ஆவது நாளான இன்று, திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி திருஞானசம்பந்தம் (84) என்பவரும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ரவி (55) என்பவரும் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், விவசாயத்தை பாழாக்கும் பல்வேறு திட்டங்களால் வேளாண் மண்டலம் அழிந்து வருவதை மீட்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தனர்.
இத்தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.