திருவாரூர் மாவட்டத்தில் புரெவி புயலின் காரணமாக கடந்த 3 நாள்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக வடக்கு வெளி வழியாகச் செல்லக்கூடிய சித்தாற்று கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர், கள்ளிக்குடி கிராமப் பகுதி குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துள்ளதால் கிராம மக்கள் யாரும் வெளியே வரமுடியாத அளவிற்கு தவித்துவருகின்றனர்.
திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்திற்குள் புகுந்த வெள்ளம் மேலும் சித்தாற்றில் ஏற்பட்ட உடைப்பால் வெள்ள நீர் வீடுகளிலும் புகுந்துள்ளது. இதனால் இந்தப் பகுதி முழுவதும் குடிநீர், மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதனையடுத்து தண்ணீர் புகுந்து தற்போது வரை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறை அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாததால் கூடுதலாகத் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனைக் கவனத்தில்கொண்டு சித்தாற்றின் உடைப்பை சரிசெய்து கிராம மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.