திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி விவசாயிகள் மும்முரமாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தை பொருத்தவரை நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொல்லுமாங்குடி, பாவட்டகுடி, கதிராமங்கலம், பேரிளம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் சம்பா தாளடி நெல் பயிர்களில் நெல்பழநோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
இதனால் மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நோய் அடிக்கடி அறுவடை செய்யும் நேரத்தில் நெற்பயிர்களைத் தாக்குவதால் என்ன மருந்து தெளிப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம்.
வேளாண்துறை அலுவலர்களும் நேரில் வந்து பார்வையிட்டு இதற்கான உரிய மருந்தைப் பரிந்துரை செய்யாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். நெற்பழ நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நெல்லை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்றால் நெற்பழம் இருப்பதைக் காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அழைப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு நெற்பழம் நோய்த் தாக்குதல் இருந்தாலும் அந்த நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:வடகடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!