திருவாரூர் அருகே உள்ள காரியமங்கலம், அதனை சுற்றியுள்ள இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், ஆலத்தூர், மாவட்டகுடி, குலமாணிக்கம், பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் (ONGC) எட்டு எண்ணெய் கிணறுகள் அமைக்கவும் 2023ஆம் ஆண்டு வரை காலநீட்டிப்பு செய்யவும் மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று (செப்டம்பர் 11) அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரியமங்கலத்தை சுற்றியுள்ள விவசாயிகள், தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், காரியமங்கலத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது, "காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு 2020 ஜனவரி மாதம் அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசு 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மசோதா என்ற பெயரில் விவசாயிகளின் கருத்து கேட்காமலேயே மாசுக் கட்டுப்பாட்டுதுறை அனுமதியின்றியும் மாநில அரசுகளின் அனுமதியின்றியும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பேரழிவு ஏற்படுத்தும் திட்டங்களை நிறைவேற்ற மாபெரும் சதி திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.
கடந்த 2013இல் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி அருகே உள்ள காரியமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறு அமைக்கும்போது கட்டுக்கடங்காத வாயு வெடித்து சிதறி வெளியேறியது. இதையறிந்த விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் தீயை அணைத்து கிணறு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து 2014ஆம் ஆண்டு திருவாரூர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேளாண்துறை சார்பில் தனித்தனி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு மீண்டும் தோண்டுவதற்கு 2023 வரை கால நீட்டிப்பு வழங்கியிருப்பது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுகள் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.