புதுச்சேரி மாநிலம் கரைக்கால் அருகே உள்ள மதகடியில், சுமார் 20-க்கும் மேற்பட்ட திருநங்கை குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பில் வழங்கக்கூடிய சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடியும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக திருநங்கைகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய அவர்கள், “காரைக்கால் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திருநங்கை குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். புதுச்சேரி அரசின் சார்பில் வழங்கக்கூடிய இலவச வீட்டுமனை பட்டா ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட சலுகைகள் எதுவும் கிடைக்காததால் பல ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ் எங்கள் அன்றாட தேவைகளுக்கும் உணவிற்கு பணம் தேவைப்படுவதால் வேறு வழியின்றி கடைகளுக்கு சென்று வசூல் செய்தும், இரவு நேரங்களில் பாலியல் தொழில் செய்தும் வாழ்ந்து வருகின்றோம்.
அப்போது காவல்துறையினர் எங்களை தடுத்து விரட்டி அடிப்பதால் அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்து வருகின்றோம். எனவே திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, நலவாரிய அட்டைகள், சுய தொழில் செய்ய கடன் வழங்குதல் உள்ளிட்ட இலவச திட்டங்களை புதுச்சேரி அரசு செய்ய வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சுமார் ரூ.8,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - அரசு தகவல்