திருவாரூரில் கரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், மருந்துப் பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "புதிய கல்விக் கொள்கையில் தமிழ்நாடு அரசு ஏனோ தானோ என்று முடிவெடுக்க முடியாது. அதனை முழுமையாக ஆய்வு செய்து பின்னர் தான் முடிவெடுக்க முடியும்.
மத்திய அரசு எப்போதும் மும்மொழிக் கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி, இரு மொழிக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், '' ஜூன் மாதம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை இல்லாமல் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. முன்னரே இரண்டு நாள்களில் பணம் கொடுத்து பொருள்களை வாங்கியவர்களுக்கு, ஜூலை மாதம் இலவசமாக வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
குறிப்பாக அவர், "திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக 82 ஆயிரம் ஏக்கர் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லாததால், 96 ஆயிரம் ஏக்கர் என விளைநிலம் அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'புதிய கல்விக் கொள்கை கேஃப்டேரியா அணுகுமுறையாக உள்ளது' - டாக்டர் எம்.கே.ஸ்ரீதர்!