திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அறுவடைப் பணிகளின் முதல் விளைச்சல் நடைபெற்றுவருகிறது. பருத்தி கிலோ ஒன்றுக்கு 87 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் முதல் விளைச்சல் நிறைவடைந்த நிலையில் இரண்டாவது விளைச்சல் பருத்தி அறுவடை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது.
ஆள்பற்றாக்குறை
100 நாள் வேலைத்திட்டம் நடைபெற்றுவருவதாலும், சம்பா பணிகள் தொடங்கியுள்ளதாலும் அந்தப் பணிகளுக்கு ஆட்கள் சென்றுவிடுவதால் பருத்தி அறுவடைக்கு ஆட்கள் அதிகளவில் பற்றாக்குறை நிலவிவருகிறது. இதனால், பருத்திகள் வயலில் காய்ந்து கருகி வீணாகிவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பேசிய விவசாயிகள், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் பருத்தி அறுவடை இயந்திரத்தை விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் அறிமுகப்படுத்தியது. ஆனால், இது நடைமுறைக்கு வராமல் போனதால் விவசாயிகளிடம் பெருமளவில் சென்று சேரவில்லை.
தனியார் நிறுவனத்தை ஊக்குவிப்போம்
எனவே, பருத்தி அறுவடை இயந்திரத்தை உருவாக்கிய தனியார் நிறுவனத்தை ஊக்குவித்து மீண்டும் அறுவடை இயந்திரத்தைத் தயாரித்து பருத்தி விவசாயிகளுக்கு வழங்கினால் ஆட்கள் பற்றாக்குறை நேரத்தில் இயந்திரத்தைக் கொண்டு நாங்கள் பருத்தியை எடுக்கும் பணிகளை மேற்கொள்வோம்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பருத்தி அறுவடை இயந்திரத்தை ஊக்குவித்து விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.