கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவை கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஜம்மு - காஷ்மீர் வரலாறு, 370 சட்டப்பிரிவு ரத்தால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கிடையே விவாதம் நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் காஷ்மீர் விவாகரத்திற்கு எதிராக துண்டு பிரசுங்களும் வினியோகித்தாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து மத்திய பல்கலைக்கழக ஒழுக்கநெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் விளக்கம் கேட்டு 7 மாணவிகள் உட்பட 30 மாணவர்களுக்கு நோட்ஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை கண்டித்தும், அனுப்பப்பட்ட நோட்டீசை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.