ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (ஏப். 29) நள்ளிரவில் ஹரிஷ், ஜீவிதா ஆகிய இரண்டு குழந்தைகள் தனியாக நின்றுகொண்டிருந்ததை அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் குழந்தைகளிடம் விசாரணை செய்தனர்.
அப்போது குழந்தைகளின் தந்தையின் கைப்பேசி எண்ணிற்கு குழந்தைகளின் படத்தை காவலர்கள் அனுப்பிவைத்து காவல் நிலையம் வரவழைத்தனர். அப்போது அவரை காவல் துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் குழந்தைகளின் தந்தை சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பதும் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவருவதும் தெரியவந்தது.
மேலும் ஏப்ரல் 28ஆம் தேதி இரவு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ரயில் மூலம் சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த தாய் மீனாட்சி, இரண்டு குழந்தைகளையும் ரயில் நிலையத்திலேயே விட்டுச் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
லோகேஷ், குழந்தையின் பாட்டி மகேஸ்வரி, தாத்தா சதாசிவம், உறவினருடன் வந்தவர்களிடம் காவல் உதவி ஆய்வாளர் சாந்தி இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து, மீண்டும் இதுபோன்று நடக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.