மாநில அளவிலான 18 வயதுக்குள்பட்டோருக்கான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 60 அணிகள் கலந்துகொண்டன.
இப்போட்டியில் ஆண்களுக்கான இறுதிச் சுற்றில் திருச்சி அணியை வீழ்த்தி திருவாரூர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெண்களுக்கான இறுதிச் சுற்றில் காஞ்சிபுரம் அணியை சென்னை அணி வீழ்த்தி சாம்பியன் மகுடத்தைச் சூடியது.
வெற்றிபெற்ற வீரர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்கினார். மேலும் வெற்றிபெற்ற அணிகள் ஆந்திராவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.