தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
திருவாரூரில் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் வைத்து நாகை நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் தேர்தல் அலுவலரான ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அலுவலர்கள் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு தனித்தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன் ,லேப்டாப் அல்லது இதர எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
வாக்குகள் எண்ணப்படுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக முகவர்கள் தங்களது நியமன கடிதங்களையும், அடையாள அட்டைகளையும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.