திருவாரூர்: கூத்தாநல்லூர் தாலுகா, வெள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் ராஜேந்திரன், மாலா. இவர்களுடைய மகன் போல்த்ராஜ். இவர் தனது குடும்ப வறுமையின் காரணமாக 10ஆம் வகுப்புப் படிப்பினைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைத் தேடி அலைந்த நிலையில், ஒரு தனியார் ஆங்கில மருந்துக் கடையில் வேலை கிடைத்தது.
போல்த்ராஜ் தனது பள்ளி பருவத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கும், தனது கிராமத்திற்கும் பெருமைத் தேடித் தர வேண்டும் என்ற பேராவல் இருந்தும் தனது குடும்ப நிலை காரணமாக அவரது கனவு நிறைவேறாமல் போனது.
நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உதவி
தான்கண்ட கனவு நிறைவேறாமல் போனாலும் மனம் தளராத போல்த்ராஜ் தனது கிராமத்தில் விளையாட்டுத் துறையில் ஆர்வம் உடைய 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துவருகிறார்.
குறிப்பாக, கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டில் ஆர்வம் உடைய மாணவர்களுக்கு போல்த்ராஜ் தனக்கு மாதாமாதம் கிடைக்கும் சொற்ப வருவாயில் விளையாட்டு பயிற்சிக்கான மைதானத்தைச் சீர்செய்தல், வீரர்களுக்குத் தேவையான காலணி, பனியன், சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வாங்கித் தந்து விளையாட்டுத் துறையில் சாதனையாளராக உருவாக்கிட கடும் முயற்சி மேற்கொண்டுவருகிறார்.
அரசும் முன்வர வேண்டும்
இவரது, தன்னலமற்ற பணியால் விளையாட்டு வீரர்கள் பலர் அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு கிடைக்கும் பணி இடங்களின் வாயிலாக அரசு வேலைகளிலும் சேர்ந்துவருகின்றனர்.
விளையாட்டுத் துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற கனவு போல்த்ராஜுக்கு இருந்தபோதிலும் வறுமை நிலை காரணமாக, அவரது கனவு கனவாகவே மாறியது. இருப்பினும், தான் கண்ட கனவை ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் வாயிலாக நனவாக்கி தான் பிறந்த கிராமத்தை ஒலிம்பிக் வரை கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையோடு போல்த்ராஜ் பாடுபட்டுவருகிறார்.
விளையாட்டு வீரர்களின் விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்டுவருகிறார். போல்த்ராஜுக்கு தமிழ்நாடு அரசு ஏதேனும் உதவி செய்தால் விளையாட்டுத் துறையில் மேலும் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வைப்பார் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: SA vs IND 2nd Test: இந்தியா படுதோல்வி; தொடர் சமன்