திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் பெண் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், அதுகுறித்து காவல் துறையினருக்கும் அப்பகுதியினர் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து சாராய விற்பனை நடந்துவருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் விளக்குடி முக்கியச் சாலையில் குறுக்கே கயிறு கட்டி அதில் கள்ளச்சாராய பாட்டில்களை தொங்கவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி பழனிச்சாமி, ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாராய விற்பனை இனி நடைபெறாது என்றும், விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறியதை அடுத்து அம்மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மூட்டைகளில் அடைத்து கள்ளச்சாரயம் விற்றுவந்தவர் கைது