திருவாரூர் மாவட்டம் குளிக்கரை சாரூரன் கிராம மக்கள் இன்று (ஜூலை 23) மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் " திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சாருரன் கிராமத்தில் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
அதே பகுதியில் வசிப்பவர் பி. செல்வராஜ் (70) இவருடைய மகன்கள் செந்தில்குமார் (35), ராஜ்குமார் (33) இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சியதை தட்டிகேட்டதால் எங்கள் சாருகான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கும் இவர்களுக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் இவர்கள் அடிக்கடி எங்களிடம் தகராறு செய்துவருகின்றனர்.
மேலும் முகம் தெரியாத கூலிப்படையைச் சேர்ந்த ரவுடி கும்பலைக் கொண்டு நேற்று இரவு 10 மணியளவில் எங்கள் கிராம மக்கள் மீது சரமாரியாக பெட்ரோல் குண்டு, அரிவாள், பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். இந்தத் தாக்குதலில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களின் வீடுகளையும் சூறையாடி தீ வைக்க முயற்சித்தனர். இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செந்தில்குமார் என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள், கொலை முயற்சி, ஆள்கடத்தல், கஞ்சா, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு மாதங்களுக்கு முன்பு தெருவிலுள்ள பெண்களை ஆபாசமாக படம் எடுத்தனர். மதுபானம் தயாரிக்கும்போது ஊர் மக்கள் கேட்டபோது அனைவரையும் தாக்கிவிட்டு அண்ணன், தம்பி இருவரும் தப்பி ஓடிவிட்டனர். தற்போது கூலிப்படையை அழைத்துவந்து எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இச்சம்பவம் குறித்து உடனே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என" கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க... கூலிப்படையை ஏவி இளைஞர் மீது தாக்குதல் - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்!