திருவாரூர்: வடகிழக்குப் பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள கந்தன்குடி கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கிராமத்தின் அருகே செல்லக்கூடிய வாஞ்சியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, ஆற்றுநீர் முழுவதும் மழை நீருடன் சேர்ந்து கந்தன்குடி கிராமத்திற்குள் சூழ்ந்தது.
இதனால் கிராம மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்குக் கூட குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வைத்துக்கொண்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இது போன்ற பிரச்னைகள் வந்து கொண்டே இருப்பதும், அலுவலர்கள் வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இதுவரை எந்த ஒரு அரசு அலுவலர்களும் இங்கு வந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுத்து மழைக்காலம் முடிந்த பின் ஒரு தரமான தார்ச்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஐடி கவுஹாத்தி கண்டுபிடிப்பு: சாதாரண துணிகளை முகக்கவசமாக மாற்றும் பூச்சு!