திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நகருக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், மக்கள் வீட்டை வீட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "டிசம்பர் 1ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்த போதிலும் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. இக்காரணத்தினால் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடிகால்களில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், தண்ணீர் வடியாமல் இருக்கிறது.
நகராட்சிக்குத் தேவையான ஆணையர்கள், பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையெல்லாம் காதில் வாங்காமல் மெத்தனப் போக்குடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டதன் காரணமாகவே திருத்துறைப்பூண்டி தண்ணீரில் மூழ்கி உள்ளது. மோட்டார்கள் மூலம் உடனடியாக நீரை வெளியேற்ற வேண்டும்.
மழையின் காரணமாக சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் எல்லாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. ஆகையால் உடனடியாக அரசு இந்தச் சாலைகளைச் செப்பனிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: வேலூர் சிறையில் துன்புறுத்தல், தமிழ்நாடு உள்துறைக்கு நளினி கடிதம்.!