திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சங்கமங்கலத்தில் 50 ஏக்கர் நிலத்தில் ரவி என்பவர் கடந்த 30 ஆண்டுகாலமாக கோரைப்புல் விவசாயம் செய்துவருகிறார்.
இதை நடவுசெய்ய குறைந்த ஆள்கள் போதுமானது என்றும் ஒருமுறை நடவுசெய்தால் தொடர்ந்து 50 ஆண்டுவரை நல்ல மகசூல் தரக்கூடியது என்றும் கூறப்படுகிறது. நெல் சாகுபடியைவிட கோரைப்புல் சாகுபடிக்கு ஆகும் செலவும் குறைவானதே.
மேலும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லாபம் கிடைக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பயிர்கள் சேதமடைய வாய்ப்பில்லை. கோரைப் புல்லானது மழை, வெயில் காலங்களைத் தாங்கக்கூடிய பயிராக வளரும் தன்மைகொண்டது.
தற்போது, கோரைப் புல் அறுவடைப் பணி தொடங்கியுள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளைக் கொண்டு இவற்றை அறுவடை செய்ய இயலாது என்பதால் இவற்றிற்குத் தனியாக ஆள்கள் வைத்து அறுவடை செய்கிறார்கள்.
அறுவடை செய்த கோரைப் புல் சேலம், கோவை, வாணியம்பாடி, பொன்னேரி, குறிஞ்சிபட்டி, கயத்தாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் வெளிமாநிலமான மும்பைக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தக் கோரைப் புல், தரையில் விரிக்கும் பாய் தயாரிக்கப் பயன்படுவதால், அதன் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. தற்போது மக்கள் அதிகமாக இயற்கை முறையிலான கோரைப்பாய்களை விரும்பாமல், செயற்கை முறையிலான நெகிழிப் பாய்களை அதிகம் விரும்புவதால் இயற்கை கோரைப்பாய்கள் தயாரிக்கும் தொழில் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நெகிழிப் பாய்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் ஏற்பட்டு தோல் நோய்கள் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கோரைப் பாய்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயத்தைக் கைவிட்டுச் சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கோரைப் பாய்கள் பயன்படுத்தினால் உடல் வெப்பம் ஏற்படாது மேலும் உடல் மந்தநிலை குறையும் என இவ்வாறு பல நன்மைகள் உள்ளன.
இதனால் தமிழ்நாடு அரசு கோரைப் புல் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளை ஊக்குவிக்கும்விதத்தில் நெகிழிப் பாய்களைத் தடைசெய்தும் கோரைப் புல் விவசாயிகளுக்கு மானியம் வழங்கியும் உதவ வேண்டும் என்று கோரைப் புல் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: வறட்சி நீங்கியும் வலி நீங்காமல் இருக்கும் விவசாயிகள்