திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக திருவாரூர் நகர்ப்பகுதிகள், குடவாசல் வலங்கைமான்,நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வரை திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 612 இருந்து வந்த நிலையில் இன்று (ஆக.21) மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 682 ஆக அதிகரித்துள்ளது.
இதில் திருவாரூர் அருகே வைப்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு காவலர்களுக்கும், எடையூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கும் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது.
இதேபோன்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் உள்ளிட்ட 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மாவட்டத்தில் 30 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக திருவாரூர் சன்னதி தெரு, காட்டுதெரு, உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதித்தவர்கள் அதிகம் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.