மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்ட கூட்டரங்கில், ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பாகுபாடு இல்லாமல் சரிசமமாக வளர்க்க வேண்டும், குழந்தைத் திருமணம் பற்றி தெரியவந்தால் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம், பெண்குழந்தைகளுக்கான உயர்கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும், பெண் குழந்தைகளின் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும், சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கும், தாய், தந்தையில் ஒருவரை இழந்த மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், சமூக நலத்துறை அலுவலர்கள் உமையாள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5945 குழந்தைகள் அரசிடம் வந்துள்ளன' - அமைச்சர் சரோஜா தகவல்