நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதைத் தொடர்ந்து, பணம் கையாடலைத் தடுப்பதற்காக, தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வேளாண்துறை இணை இயக்குநர் உத்திரபாதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கும்பகோணத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கிச்சென்ற பார்சல் சர்வீஸ் வாகனத்தை சோதனையிட்டனர். அதில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, திருவாரூர் வட்டாட்சியர் அலுவலத்தில் ஒப்படைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர்.