திருவாரூர் அருகேயுள்ள பிலாவடி மூலை, கேக்கரை, மருதபட்டினம், கடகம்பாடி, பழவர்ணகுடி, மெச்சக்குடி, உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, குறுவை, சாகுபடி கடந்த காலங்களில் நடந்தது. கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதிக்கு மேட்டூர் அணை நீர் வராததால், தற்போது, 200 ஏக்கர் அளவிலேயே விவசாயம் நடைபெற்றுவருகிறது.
திருவாரூர் ஓடம்போகியாற்றில் இருந்து பிரியும் 'ஏ'சேனல் வாய்க்கால்கள்தான் இப்பகுதி விவசாயிகளின் பாசனத்திற்குத் தேவையான நீரை வழங்கிவந்தது. இந்த வாய்க்காலை நம்பி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாசன வசதிபெற்று சாகுபடி செய்துவந்த நிலையில், தற்போது வாய்க்காலானது சரிவர தூர்வாரப்படாததால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை மண்டிக்காட்சியளிக்கின்றன.
நகர்ப்பகுதிகளில் வாய்க்காலில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் வாய்க்கால் தடம் தெரியாமல் காட்சியளிக்கின்றது. இந்த வாய்க்காலை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. கிராம மக்களும் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் காவல் துறையினரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்