திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்திற்குட்பட்ட சில நகர்ப்புறம், கிராமப்புற கணக்கெடுப்பு பகுதிகளில், புள்ளியியல் அலுவலக களப்பணியாளர்களால் தேசிய மாதிரி ஆய்வு 78ஆவது சுற்றுக்கான புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்வேளையில், இந்த பணி 4 நகர்ப்புறம், 12 கிராமப்புற பகுதிகளில் நடைபெற்று வரும் மாதிரி கணக்கெடுப்பில் தேர்வு செய்யப்பட்ட சில குடும்பங்களில் மக்களின் வாழ்வாதாரம் குறித்த செலவின விவரம், சுற்றுலா சார்ந்த செலவின விவரங்கள், சுகாதாரம், கல்வி, மருத்துவம், தகவல்தொடர்பு, வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், இடப்பெயர்ச்சி, விவசாயம் சார்ந்த பணிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலும், தங்களிடம் இருந்து பெறப்படும் விவரங்கள் அனைத்தும் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு திட்டமிடல், கொள்கை வகுத்தல், ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.
இதில் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கு பெரிதும் துணைபுரிவதால் புள்ளியியல் துறை சார்ந்த கணக்கெடுப்பு அலுவலர்கள் தகவல் சேகரிக்க தேர்ந்தெடுப்பப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து தகவல்கள் அளித்திடுமாறு” என குறிப்பிடப்பட்டுள்ளது.