திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பழையங்குடி கிராமத்தில் இயந்திர நேரடி விதைப்பினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளின் நலன் காக்கின்ற வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 97,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு, இதுவரை நேரடி நெல் விதைப்பு மூலம் 11,895 ஏக்கரிலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 21,450 ஏக்கரிலும், இயல்பான நடவு முறையில் 4,165 ஏக்கரிலும் என மொத்தம் 37,510 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 59,490 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருந்திய நெல் சாகுபடி நாற்றாங்கால் 209 ஏக்கரிலும், இயல்பான நடவு முறை நாற்றங்கால் 443.3 ஏக்கரிலும், சமுதாய நாற்றாங்கால் 42.3 ஏக்கரிலும் என மொத்தம் 694.5 ஏக்கரில் நடவிற்கு தயாராக நாற்றாங்கால் இருப்பு உள்ளது.
ஜூன் மாதத்திற்கான யூரியா 4,650 மெட்ரிக் டன்னில் இதுவரை 2,798 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4,772 மெ.டன் இருப்பு உள்ளது. டிஏபி உரத் தேவையாகிய 1,820 மெ.டன்னில் இதுவரை 350 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.