திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒன்றுதிரண்டு நிதி திரட்டி அப்பகுதியில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட குளங்களை முழுமையாக தூர்வாரி உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 7, 8, 9 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பாதாள சாக்கடை நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்த கழிவுநீர் தூர்வாரப்படாத குளங்களில் கலப்பதால் குளம் முழுவதும் கழிவுநீரால் நிரம்பி உள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுவருகிறது.
கழிவுநீர் கலப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குளத்தை சீரமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.