திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் 14ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா இன்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.
மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 2007ஆம் ஆண்டு நெல் விழாவை முதல்முதலாக தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன் பாரம்பரிய சாகுபடி செய்து வந்து மறைந்து போன நெல் ரகங்களை மீட்டெடுப்பதே இந்த நெல் திருவிழா நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
நெல் திருவிழா தொடங்கியபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மறைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், யானைக்கவுனி, ராஜமன்னார், சீரகசம்பா உள்ளிட்ட 176 வகையான நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகளுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம்.
மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பரவலாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் திருவிழா தொடங்கியது.
மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு காய்கறிகள், வாழை மரங்கள், நெற்கதிர்கள் ஆகியவை அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் வைக்கப்பட்டு பாரம்பரிய இசையுடன் விவசாயிகள் ஊர்வலமாக வந்து பாரம்பரிய நெல் திருவிழா தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழாவில் கோவை வேளாண் கல்லூரி, நீடாமங்கலம் அறிவியல் நிலையம் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இத்திருவிழாவில் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நெல் ரகங்கள் வழங்கப்பட்டன. விவசாயம் குறித்த கருத்தரங்குகள் முன்னோடி இயற்கை விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.