நன்னிலம் அருகேயுள்ள ஆத்தூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் அமுதா என்பவரது வீட்டின் அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால், அமுதாவின் வீடு தீப்பற்றி எரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கத்தில் உள்ள அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ மளமளவென பரவி நான்கு வீடுகள் தீக்கிரையாகின. வீட்டிலிருந்த தங்க நகைகள், புடைவைகள், எலக்ட்ரிக் பொருட்கள் என எதுவுமே மிஞ்சவில்லை. தீயில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களின் இருந்து அடிக்கடி தீப்பொறிகள் பறந்து விழுந்ததை, மின்வாரியத்திடம் பலமுறை புகாரளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்களின் அலட்சியத்தால் நான்கு வீடுகள் ஒன்றுமில்லாமல் போய்விட்டதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், தீப்பற்றியவுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் மிகத் தாமதமாக வந்ததுதான் வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாக காரணம் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள் ரூ.5,000 மட்டும் கொடுத்துச் சென்றதாகவும், மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆத்தூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'உங்களால் முடிந்தால் வழக்குப்பதிவு செய்துகொள்ளுங்கள்' - மிரட்டிய ஜப்பானியரை கொத்தாக தூக்கிய போலீஸ்