திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் காமராஜ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 90 ஆயிரத்து 623 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தோட்டக்கலை பயிர்கள் 65-ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதும் குறைவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் தவிர்க்க முடியாத நிலையில்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டத்தை மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தை கடைசியாக செயல்படுத்தும் கடைசி மாநிலம் தமிழ்நாடுதான். பயோமெட்ரிக் முறையில் அவ்வப்போது ஏற்படும் சர்வர் நெட்வொர்க் பிரச்னைகள் இல்லாமல் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ரேஷன் பொருள்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா!