மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமலும், மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளுடைய கருத்துகளைக் கேட்காமலும் தான்தோன்றித்தனமாக சட்டத்தை நிறைவேற்றியது.
கரோனாவால் உலகமே முடங்கிக்கிடந்த சூழ்நிலையில் பெயரளவில் நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து விவசாயிகளை அந்நியர்களிடம் அடிமைப்படுத்திவிட்டது. இச்செயலை ஐ.நா. சபையே கண்டிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்தும், போராட்டம் குறித்தும் தொடரப்பட்ட 2 வழக்குகளை ஒன்றாக விசாரித்து, முதல் கட்ட தீர்ப்பாக அரசியலமைப்புச் சட்டப்படி விவசாயிகள் போராடுவதற்கு உரிமை இருக்கிறது எனக் குறிப்பிட்டு, விவசாயிகள் போராட்டம் தொடர அனுமதி அளித்திருக்கிறது.
இரண்டாவது கட்ட தீர்ப்பாக மத்திய அரசு சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு நீதிமன்றம் கூறிய ஆலோசனையை ஏற்க மறுத்தும், சட்ட மறுஆய்வு செய்வதற்கான குழு உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கு மௌனம் காக்கும் மத்திய அரசிற்குப் பதிலடியாக சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தும், ஆய்வுக்குழு உறுப்பினர்களையும் நியமனமும் செய்துள்ளது.
இக்குழு மாநில அரசுகள், விவசாயிகளின் கருத்துகளை அறிந்தும், சட்டத்தில் இருக்கிற பாதிப்புகள் குறித்து உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும். அதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கும் என அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வர வேண்டும்.
இந்நடவடிக்கைகள்தான் அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க உதவிகரமாக அமையும் என வலியுறுத்துகிறேன். சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு விரைவில் 20ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வரும்- அமைச்சர் விஜயபாஸ்கர்