திருவாரூர் மாவட்டம், குடவாசலில் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜை அறிமுகப்படுத்தி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், " உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததற்கு நன்னிலம் தொகுதி மக்கள் செய்த பிரார்த்தனையே காரணம். மறுபிறவி எடுத்துவந்துள்ள அவரை இந்தத் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவேண்டும்.
அதிமுக அரசு வருகின்ற தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் வேண்டுமானால் காணாமல்போன அரசை வந்து கண்டுபிடித்து கொடுக்கட்டும். அதிமுக அரசுதான் மீண்டும் ஆட்சி அமைக்கும். ஒரு மூலையில் இருந்து யாரோ ஒருவர் எழுதித் தரும் துண்டு சீட்டை வைத்துவிட்டு எதையும் பேசக்கூடாது.
நான் ஊர்ஊராக செல்வதால் மக்களின் பிரச்னைகளை நன்கு அறிவேன். அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. ஸ்டாலின் கனவு ஒரு போதும் பலிக்காது. இனி பலிக்கப் போவதுமில்லை. திமுகவின் வெற்றிக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டன. இனி திமுகவிற்கு வாய்ப்புகளே இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது.. ஸ்டாலின் அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எத்தனையோ சதித் திட்டங்கள் தீட்டினார் அத்தனையும் நான் முறியடித்துவிட்டேன்.
அதிமுக ஆட்சி இன்று போய் விடும், நாளை போய்விடும் என பொய்யாகப் பேசி நான்கு ஆண்டுகளை ஓடிவிட்டார். இந்த முறை மட்டும் இல்லை, எத்தனை முறை தேர்தல் வைத்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் விரக்தியின் விளிம்பிற்கே தற்போது ஸ்டாலின் சென்று விட்டார்.
தமிழ்நாடு ஆளுமையில் சிறந்த மாநிலமாக உருவாகியிருக்கிறது என மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. உரிய நேரத்தில் ஆறுகள், வாய்க்கால்களைத் தூர்வாரியதால் தண்ணீர் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றதால் நல்ல மகசூல் கிடைத்தது. சென்ற ஆண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 32 லட்சத்து 41 ஆயிரம் டன் கொள்முதல் செய்து சாதனைப் படைத்துள்ளோம்.
சொந்த வீடு, நிலம் இல்லாத அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் அரசின் மூலம் இலவச வீடு, நிலம் வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" எனக் கூறினார்.