திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள மருதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (38). இவர் தனது கணவரை இரண்டு வருடமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நன்னிலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார்.
இதில் பள்ளியின் தாளாளர் வெற்றி செல்வன் என்பவருக்கும், சத்தியாவிற்க்கும் இடையே நட்புறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (டிச.4) இருவருக்குமிடையே பள்ளியிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திம் அடைந்த வெற்றி செல்வன் சத்யாவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் சத்யா பள்ளியிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அவரை மீட்டு பேரிளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து மயிலாடுதுறை தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (டிச.5) காலை 4 மணியளவில் சத்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் சத்யாவின் உடல் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டபோது பூந்தோட்டம் கடைத்தெருவில் உறவினர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்து சத்யாவின் இறப்பில், சந்தேகம் இருப்பதாகக் கூறி குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பேரிளம் காவல்துறையினர் குற்றவாளியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானம் பேசி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரூர் ஆசிரியர் பணியிடை நீக்கம் - தவறான முடிவு என சங்கங்கள் கண்டனம்