திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தில் ஒரு கோடியே 73 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலக கட்டடமும் 2 கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.
கட்டடப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று(நவ. 15) பார்வையிட்டார். அப்போது பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களிடம் கட்டட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா காலத்திலும் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் கூடுதலான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளிக்கோட்டை கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலக கட்டடமும் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.
வளர்ச்சிப் பணிகள் ஒருபுறம் நடைபெறுவது போலவே, வடகிழக்கு பருவ மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை எதிர்கொள்கிற வகையில் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
தொடர்ந்து பாஜக குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "பாஜக தங்கள் இயக்கத்தை உயர்த்தி பேசுவது, அதிமுகவை விமர்சித்து பேசுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதிமுக மாபெரும் தொண்டர்களை கொண்ட மக்கள் இயக்கம். இதில் யாருக்கும் எள்ளவும் சந்தேகம் வர வாய்ப்பில்லை" என்றார்.
இதையும் படிங்க: தொடர் விடுமுறையையொட்டி குமரி கடற்கரையில் கூடிய சுற்றுலாப்பயணிகளின் கூட்டம்