திருவாரூர்: மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று (அக். 16) நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைக்கும் மகளிருக்கான மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 500 உழைக்கும் மகளிருக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான அம்மா இரு சக்கர வாகனங்களுகான சாவி மற்றும் காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது;
தற்போது "ஒரே நாடு", “ஒரே ரேஷன் கார்டு" திட்டம் செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பி.ஓ.எஸ் மிஷின் பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில்கொண்டு பழைய ஸ்கேனிங் முறையையும் இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பயோமெட்ரிக் முறை செயல்படுத்துவதில் கிராமப்புறம், மலைப்பகுதிகளில் இணையவழி பிரச்னைகள் இருப்பதை கருத்தில்கொண்டு பழைய ஸ்கேனிங் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் நியாயவிலைக் கடைகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் போதுமான அளவிற்கு இருப்பில் உள்ளதால் மக்கள் பாதிக்காத வண்ணம் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து புகார்கள் வந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.