திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021 குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.எஸ்.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் எம்.எஸ்.சண்முகம் பேசுகையில், “1.01.2021 அன்று தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி, வாக்காளர் பட்டியல் திருவாரூர் மற்றும் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
18 வயது நிறைவடைந்து இந்நாள் வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களும் 1.01.2021 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வது உள்ளிட்ட சேவைக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 16.11.2020 முதல் 15.12.2020 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்” என்றார்.
முன்னதாக திருவாரூர் தொகுதிக்குட்பட்ட அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்த சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொடங்கியது திமுக உயர்நிலை திட்டக்குழு ஆலோசனை கூட்டம்