திருவாரூர் மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுவெளியில் நடமாடுவோர், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக மணல் கடத்தல், மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட நான்கு தனிப்படைகள், கடந்த மூன்று நாள்களாக மாவட்டம் முழுவதும் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.
இதில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 54 பேரையும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் உள்பட மொத்தம் 97 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சட்டவிரோதச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் பார்க்க: குடும்பங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது ஆராயப்படும் - சிதம்பரம்