தஞ்சாவூர்: கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம், அதன் தலைவர் வி.எம்.கே.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த அனைவரையும் கும்பகோணம் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அகிலா மிர்ஷா வரவேற்றார்.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத், கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களைச்சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர், ”தற்போதைய மத்திய பாஜக அரசு, ஊழலின் மொத்த உருவமாக இதுவரை எந்த அரசும் இந்த அளவிற்கு ஊழல் செய்திருக்க முடியாது என்ற அளவில் செயல்பட்டு வருகிறது. 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதற்காக யார் செலவழித்தார்கள்? இந்தப் பணம் எப்படி வந்தது?.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய பல பொதுத்துறை நிறுவனங்களை இன்று மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. இது ஒட்டுமொத்தமாக மக்கள் நலனுக்கான அரசாக இல்லாமல், இரு தனியார்களுக்கான அரசாக செயல்படுகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசை வரும் 2024 தேர்தலில் வீழ்த்த, அதற்கு புது யூகங்களை வகுக்க ஏதுவாக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார். அவர் ராகுலாகவோ அல்லது வேறு நபர்களாகவோ கூட இருக்கலாம்’’ என்றும் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஜராத்தில் போதைப்பொருள் வியாபாரம் எளிதாகிவிட்டது... ராகுல் காந்தி...