10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை அலுவலக ஊழியர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்க திருவாரூர் வட்ட கிளை செயலாளர் எழிலரசன் தலைமையில் இரண்டாவது நாளாக இன்றும் ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேசிய கிளை செயலாளர் எழிலரசன், "உயிருக்கு அச்சுறுத்தலான கரோனா பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு பி.எம்.ஏ.ஒய்., எஸ்.பி.எம்., ஜெ.ஜெ.எம்., உள்ளிட்ட திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களை நிர்பந்திப்பதை நிர்வாகம் உடனே கைவிட வேண்டும்.
பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்ட நான்கு ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை குறித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17 (ஆ ) குற்றச்சாட்டுகளை உடனே ரத்து செய்திட வேண்டும்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். கணினி உதவியாளர் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
ஊரக உள்ளாட்சி வளர்ச்சித் துறை இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்கர் பதவி உயர்வு ஆணைகளை வழங்கிட வேண்டும்.
கரோனா நேரத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும்.
கரோனா பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்தபடி 50 லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் வட்ட கிளை சார்பில் இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது" என தெரிவித்தார்.
ஊழியர்கள் முகக் கவசம் அணிந்து, சமுக இடைவெளியை கடைப்பிடித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.