திருவாரூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியர் குமார் - யோகலெட்சுமி. இவர்களது மகன் விநாயக் (4) திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவந்தார்.
இந்நிலையில் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் விநாயக் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டிலிருந்து வெளியில் ரோட்டிற்கு ஓடிவந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் மணல் ஏற்றிவந்த டிராக்டர் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தார். இதைக்கண்ட டிராக்டர் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த திருவாரூர் நகர காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரைத் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:குமரியில் சிக்கிய குழந்தைக் கடத்தல் கும்பல்!