திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துப்புரவு பணியாளர் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்மணிக்கு தலையில் தையல் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சூடு அடங்குவதற்குள் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சுமீத் நிறுவன துப்புரவு பணியாளர் நோயாளி ஒருவருக்கு செலின் பாட்டில் போட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு மருத்துவம் பார்க்க பணத்தை வட்டிக்கு வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு வசதியில்லாததால் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நாடவேண்டியுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் மருத்துவம் பார்ப்பதால் பொதுமக்களின் உயிருக்கு தற்போது உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது .
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் உமாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘கூத்தாநல்லூாில் மருத்துவம் பார்த்தது துப்புரவு பணியாளர் அல்ல பல்நோக்கு பணியாளர்தான். 50 படுக்கைகளுக்கு கீழ் உள்ள மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது . மன்னார்குடி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் தையல் போடுவதற்கு பயிற்சி எடுத்தவர்கள் ஒருவரோ அல்லது இரண்டு பேரோ இருப்பார்கள்’ என்று மலுப்பலாக பதிலளித்தார்.