திருவாரூர் கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக 50-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் 5ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகளை அடைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இது குறித்து தமிழ்நாடு அரசு கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என அறிவித்ததால் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்திருந்தனர். ஆனால் கோரிக்கை எதுவும் தற்போதுவரை நிறைவேற்றப்படாததால் தமிழ்நாடு நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திருவாரூர் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்த நியாயவிலைக் கடை ஊழியர் முருகவேல் என்பவர் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும், அரசு நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கரோனா பாதித்த ஊழியர்களுக்கு மருத்துவச் செலவு அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாநில அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.